

சென்னை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள தெற்கு அம்பலம் தெருவைச் சேர்ந்தவர் ஆஷிக் (25). இவர் 10 நாட்களுக்கு முன் சொந்த ஊரிலிருந்து சென்னை வந்து பாரிமுனை, அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ளதங்கும் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த 12-ம் தேதி அதே பகுதி ஆர்மேனியன் தெருவில் இருக்கும் நண்பர் முகமது இப்ராஹிம் (34)என்பவரது அறைக்குச் சென்றுவிட்டு தனது அறைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அப்போது இப்ராஹிம் அறையில் வைத்திருந்த பணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்க இப்ராஹிம், தனது நண்பர் ஒருவருடன் ஆஷிக் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த இப்ராஹிம் நண்பருடன் சேர்ந்து ஆஷிக்கை இருசக்கர வாகனத்தில் கடத்தி, தான் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் காணாமல் போன பணம் குறித்துக் கேட்டு ஆஷிக்கை சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பி வந்த ஆஷிக், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின்னர் முகமது இப்ராஹிம்மை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரது நண்பர்களான ராமநாதபுரம், கீழக்கரையைச் சேர்ந்த முகமது நஜிமுதீன் (36), அதே பகுதியைச் சேர்ந்த அதிப் (19) ஆகிய மேலும் 2 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.