

கோவை: கோவை காரமடை கோவிந்த போயன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் தங்க ராஜ். கட்டிட மேஸ்திரி. சின்னதொட்டிபாளையம் எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரது கணவர் இறந்துவிட்டதால், தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததோடு, தங்கராஜிடம் சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், திருமணமாகாத தங்கராஜ், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சுஜாதாவி டம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். கடந்த 2019 ஜூலை 29-ம் தேதி அவரது வீட்டுக்கு சென்ற தங்க ராஜ், இது குறித்து பேசியுள்ளார். சுஜாதா மறுக்கவே, அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், சுஜாதாவின் இடது கை மணிகட்டு பகுதி துண்டானது.
பின்னர், தங்க ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் சுஜாதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் துள்ளனர். பக்கத்து வீட்டுக்காரர் சசிகுமார் அளித்த புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காரமடை போலீஸார், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தங்க ராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆர்.நந்தினி தேவி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், தங்க ராஜூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் வி.பாலசுப்பிரமணி ஆஜரானார்.
தண்டனை வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கென, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி தனியாக சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.
தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படவில்லை. இந்திய தண்டனை சட்டப் பிரிவு 450-ன் கீழ் (வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்) 5 ஆண்டுகளும், சட்டப் பிரிவு 307-ன் கீழ் ( கொலை முயற்சி ) 10 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.