

திருச்சி/சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று முன்தினம் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களுக்கும், கோயில் பாதுகாவலர்களுக்கும் இடையே தகராறு, கைகலப்பு ஏற்பட்டது. இதில், கோயில் பாதுகாவலர்கள் தாக்கியதில் ஆந்திர ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஆந்திர பக்தர்சந்தாராவ் சந்தா என்பவர் அளித்தபுகாரின்பேரில், கோயில் பாதுகாவலர்கள் பரத்(33), விக்னேஷ்(29), செல்வக்குமார்(34) ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். இதேபோல, ஆந்திர பக்தர்கள் தங்களை தாக்கியதாக கோயில் பாதுகாவலர் விக்னேஷ்(29) அளித்த புகாரின்பேரில், ஆந்திர பக்தர் சென்னாராவ்(30) உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீரங்கம் கோயில் விவகாரம் தொடர்பாக, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அரசியல் சாயம் பூசுகின்றனர்: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிலர்அரசியல் சாயம் பூசுகின்றனர். ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கும், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகாணுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்தவகையில் பக்தர்கள், கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களை அழைத்துப்பேசி, பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. மேலும், அங்கு இயல்புநிலை திரும்பிவிட்டது. இந்த விவகாரத்தில் யாரையும் கைது செய்யவில்லை. இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.