

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களை கோயில் பாதுகாவலர்கள்தாக்கியதில், பக்தர் ஒருவர் காயமடைந்தார். கோயில் வளாகத்தில் ரத்தம் சிந்தியதால், நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நேற்று தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் விஸ்வரூப தரிசனத்துக்குப் பிறகு, பெருமாளைவழிபட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, மூலஸ்தானத்துக்கு முன்புறம் உள்ள காயத்ரி மண்டபத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் சிலர், தங்களை விரைந்து சேவைக்கு அனுமதிக்குமாறு கோஷமிட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த கோயில் பாதுகாவலர்களுக்கும், ஐயப்ப பக்தர்களுக்குமிடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.
இதில், கோயில் பாதுகாவலர்கள் தாக்கியதில், சென்னா ராவ் என்பவருக்கு மூக்கு உடைந்து,ரத்தம் கொட்டியுள்ளது. இதனால்ஆத்திரமடைந்த அவர், அங்குதர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்துவந்த காவல் துறையினர் அவரிடம் பேசி, வெளியே அழைத்து வந்தனர். ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தியதால், மூலவர்ரங்கநாதர் சந்நிதியின் நடை சாத்தப்பட்டு, அந்த இடத்தை சுத்தப்படுத்தி,பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டது. ரங்கநாதர் கோயிலில் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே ஏற்பட்டுள்ள இந்த மோதல் சம்பவம் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விஐபி தரிசனத்தால் தகராறு? - நேற்று காலை பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தபோது அவர்களை நிறுத்தி விட்டு, சில விஐபிக்களை கோயில் ஊழியர்கள் தரிசனத்துக்காக அழைத்துச் சென்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஆந்திர மாநிலஐயப்ப பக்தர்கள் கோஷமிட்டதால், அவர்களை கோயில் பாதுகாவலர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது.
பாஜக கடும் கண்டனம்: இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்து தர்மத்தின் மீதுநம்பிக்கையில்லாத அரசு, இந்துகோயில்களில் இருக்க வேண்டியதில்லை. ரங்கம் கோயிலில்சிலருக்கு தரிசனம் செய்ய சிறப்புவசதி செய்யப்பட்டதை பக்தர்கள் கண்டித்துள்ளனர். இதன் விளைவாக கோயில் வளாகத்தில் ரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில்நடந்து கொண்ட நபர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜகசார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்களுக்கு வேண்டியசிலரை உடனுக்குடன் தரிசனத்துக்கு கோயில் ஊழியர்கள் அனுப்பியதை தட்டிக்கேட்ட ஆந்திர ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் பக்தர் ரத்தம்சிந்தியது கடும் கண்டனத்துக்குரியது. கோயில்களில் பக்தர்களை தரக்குறைவாக நடத்துவதை அறநிலையத் துறை வாடிக்கையாகக்கொண்டுள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்கும்போது அறநிலையத் துறை நீக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாவலர்கள் கைது: பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர பக்தர் சந்தாராவ் சந்தாஎன்பவர் அளித்த புகாரின்பேரில், பாதுகாவலர்கள் பரத், விக்னேஷ், செல்வா ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் நேற்று இரவு கைது செய்தனர். இதேபோல, ஆந்திர பக்தர்கள் தாக்கியதால் காயமடைந்ததாகக் கூறி காவலர்கள் 3 பேரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கோயிலில் உண்டியலை தட்டிப்பிரச்சினை செய்த ஆந்திர பக்தர்களைக் கண்டித்தபோது, அவர்கள்தங்களைத் தாக்கியதாக பாதுகாவலர்கள் தரப்பில் விக்னேஷ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.