Published : 13 Dec 2023 05:44 AM
Last Updated : 13 Dec 2023 05:44 AM
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை எதிரேயுள்ள புத்தூர் ஆபீசர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகரன்(51). பாமக தொழிற்சங்க நிர்வாகியாக இருந்த பிரபாகரன், அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு மனைவி மற்றும் வழக்கறிஞருக்கு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் நடத்தி வந்த பிரபாகரன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிலவாரங்களுக்கு முன்பு கத்தியைக்காட்டி மிரட்டியதாக ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பிரபாகரன் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் அண்மையில் வெளியே வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் பிரபாகரன் இருந்தபோது, 4 பேர் அலுவலகத்துக்குள் நுழைந்து,பிரபாகரனை சரமாரியாக வெட்டினர். இதில் அந்த இடத்திலேயேபிரபாகரன் உயிரிழந்தார். பின்னர்4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையர் அன்பு மற்றும் அரசு மருத்துவமனை போலீஸார் அங்கு சென்று, விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில், இருசக்கர வாகனங்களில் மாஸ்க் அணிந்தபடி வந்த 4 பேர்,அலுவலகத்துக்குள் புகுந்து பிரபாகரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு, திரும்பிச் சென்றது பதிவாகியிருந்தது. அந்த 4 பேரையும் போலீஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் மேல அம்பிகாபுரம் லட்சுமணன்(38), அரியமங்கலம் பாரதியார் தெரு ரியாஸ் ராஜேஷ்(24), தஞ்சாவூர் கச்சமங்கலம் மகாதேவபுரம் ராஜேஷ் பைலட்(28), அரியமங்கலம் காமாட்சி அம்மன் இல்லம் பஷீர்(29)ஆகியோர் நேற்று முன்தினம் இரவுதிருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீஸார் அவர்களை அழைத்துச் சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, கடந்த 9-ம் தேதி பிரபாகரனிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராமஜெயம் வழக்கின் விசாரணைக்காக மீண்டும் அவர் நேற்று ஆஜராக இருந்தநிலையில், கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன? விசாரணையில், பிரபாகரனுக்கும், அரியமங்கலத்தைச் சேர்ந்த அப்பு என்ற ஹரிகிருஷ்ணனுக்கும் கார் வாங்கி விற்பதில் தொழில் போட்டி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினை இருந்ததாகவும், இதனால் அப்பு கூலிப் படையை ஏவி பிரபாகரனைக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்புவை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT