

கோவை: கோவையில், கல்குவாரி அதிபர் உள்ளிட்ட மூவரிடம் ரூ.1.80 கோடி மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை ரத்தினபுரி சம்பத் வீதியைச் சேர்ந்தவர் பொன்ஜெய பாலகிருஷ்ணன்(65). கல் குவாரி அதிபர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகாரில்,‘‘எனக்கு சமீபத்தில் வந்த வாட்ஸ் அப் குறுந்தகவலில் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. அவர்கள் கூறியதை நம்பி பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.1.43 கோடி முதலீடு செய்தேன். ஆனால் கூறியபடி லாபம் கிடைக்கவில்லை. அதன் பின்னரே நான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரிக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
கோவை காளப்பட்டி நேரு நகரைச் சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி வித்யா(46) அளித்த புகாரில், ‘‘எம்சிஏ பட்டதாரியான நான் ஆன்லைன் வாயிலாக பகுதிநேர வேலை தேடி வந்தேன். டெலிகிராம் தளம் மூலம் என்னைத் தொடர்பு கொண்ட பெண், சிறியளவிலான பணத்தை முதலீடு செய்தால் ஆன்லைன் பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறினார். பின்னர், விமான டிக்கெட் முன்பதிவு தொடர்பான வேலை வாய்ப்பு குழுவில் நான் இணைக்கப்பட்டேன். அவர்கள் கூறியபடி, பல்வேறு தவணைகளில் நான் ரூ.29.31 லட்சம் வங்கிக் கணக்குகளில் செலுத்தினேன். ஆனால் கூறியபடி லாபத் தொகை கிடைக்கவில்லை. அதன் பின்னரே, நான் மோசடி செய்யப்பட்டது தெரிந்தது’’ எனக் கூறியுள்ளார். கோவை வைசியாள் வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி பேராசிரியரான ஆர்.கோபால்(74) அளித்த புகாரில், ‘‘சில நாட்களுக்கு முன்னர் நான் வீட்டில் இருந்த போது, எனக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் மின்வாரியத் திலிருந்து பேசுவதாக கூறினார். மின் கட்டணத்தை செலுத்தவில்லை. ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறினார். நான் மின்கட்டணம் செலுத்திவிட்டேன் எனக்கூறிய போது, அது தொடர்பான வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டார். நானும் தெரிவித்தேன்.பின்னர், ஓடிபி எண்ணை தெரிவிக்குமாறு கூறினார். நானும் பதற்றத்தில் தெரிவித்துவிட்டேன். அதன் பின்னர், எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.10 லட்சம் திருடப்பட்டிருந்தது. அப்போது தான் மர்மநபர், மின்வாரியத்திலிருந்து பேசுவதாக கூறி நூதன முறையில் பணத்தை திருடியது தெரியவந்தது’’ எனக் கூறப்பட்டிருந்தது. மேற்கண்ட புகார்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான சைபர் கிரைம் போலீஸார், மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.