

கோவை: கோவை நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக துணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள, நகைக்கடையில் கடந்த மாதம் 28-ம் தேதி மர்மநபர் ஒருவர் 575 பவுன் நகை, பிளாட்டினம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகிவற்றை திருடிச் சென்றார். இதுதொடர்பாக ரத்தினபுரி போலீஸார் விசாரித்த போது, தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜய்(26) என்ற இளைஞர் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை தேடி வந்தனர். மேலும், இத்திருட்டு வழக்கு தொடர்பாக உடந்தையாக இருந்ததாக விஜய்யின் மனைவி நர்மதா, மாமியார் யோகராணி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த விஜய்யை சென்னை கோயம்பேட்டில் வைத்து நேற்று (டிச.11) அதிகாலை கோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் நகைக்கடை திருட்டு வழக்கு தொடர்பாக, கோவை மாநகர காவல்துறையின் வடக்குப்பிரிவு துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களிடம் இன்று (டிச.12) கூறியதாவது: "கடந்த மாதம் நூறடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருட்டு சம்பவம் நடந்தது. இவ்வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டத்தில் விஜய் பதுக்கி வைத்திருந்த நகைகள் மீட்கப்பட்டன. விஜய்யிடம் இருந்து 700 கிராம் வெள்ளி கைப்பற்றப்பட்டது. மொத்தம் 5.1 கிலோவில் 99 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 60 கிராம் நகைகளை மீட்க முடியவில்லை. இவ்வழக்கில் 47 காவலர்கள் விசாரணையில் ஈடுபட்டு விஜய்யை சென்னையில் கைது செய்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் சிம்கார்டு வாங்கும் பொழுது விஜய்யை மடக்கிப் பிடித்தோம்.
விஜய்யிடம் ஆதார் அட்டை எதுவும் இல்லாததால் விடுதியில் தங்க முடியாததால் இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணம் செய்து பொழுதை கழித்துள்ளார். நகைக்கடையில் திருடிய பின்னர், திருடிய நகைகளை நகைக்கடையின் பையை பயன்படுத்தி எடுத்துச் சென்றுள்ளார். திருட்டு சம்பவத்தின் போது, சாரம் வழியாக ஏறிய விஜய் ஏசி வெண்டிலேட்டர் வழியாக நகைக்கடைக்குள் நுழைந்துள்ளார். 3-வது மாடிக்குச் சென்று சீலீங்கை உடைத்து கீழே இறங்கியுள்ளார். நகைக்கடையில் முதலில் பணத்தை திருட திட்டமிட்ட விஜய், அங்கு பணம் இல்லாததால் நகையை திருடிச் சென்றுள்ளார்.
கோவை மாநகரில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து கடைகளிலும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விஜய் கடந்த மாதம் 18-ம் தேதி சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தார். பின்னர், 27-ம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்டுள்ளார். கோவை மாநகரில் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டின் பூட்டு உடைப்பு சம்பவம் 10 முதல் 15 சதவீதம் குறைந்துள்ளது. நகைப்பறிப்பு சம்பவங்களும் 40 சதவீதம் குறைந்துள்ளது", என்று அவர் கூறினார்.