

மேட்டுப்பாளையம்: வாடகைக்கு வீடு எடுத்து, போலி மதுபானங்கள் தயாரித்து விற்றது தொடர்பாக இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தொட்டிபாளையம், செந்தூர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக போலி மது பானங்கள் தயாரிக்கப்படுவதாக பெரியநாயக்கன் பாளையம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையிலான போலீஸார் தகவல் கிடைத்த இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு போலி மதுபாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருவது தெரியவந்தது.
மது பானம் தயாரிப்பில் ஈடுபட்ட கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண் (29), சந்தோஷ் குமார் (42) ஆகியோரை கைது செய்தனர். வாடகைக்கு வீடு பிடித்து, கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட எரி சாராயத்தை பயன்படுத்தி, வேதிப் பொருட்கள் கலந்து போலி மதுபானங்கள் தயாரித்ததும், அந்த பாட்டில்களின் மீது பிரபல மது விற்பனை நிறுவனங்களின் பெயர்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டியதும் தெரிய வந்தது. மேலும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி மதுபான பாட்டில்களை கேரளாவுக்கே கொண்டு சென்று விற்றுள்ளனர்.
போலி மதுபானம் தயாரிப்பு கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த அனில் குமார் (48) என்பவரை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த 1,344 போலி மதுபான குவார்ட்டர் பாட்டில்கள், தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரி சாராயம் நிரப்பப்பட்ட 5 கேன்கள், மது பானங்கள் தயாரிக்க தேவையான உபகரணங்கள், ஸ்டிக்கர்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், போலி மது பான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வந்த வீட்டை பூட்டி காவல்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.