

சென்னை: கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற வாக்குவாதம் மற்றும் மோதல் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. மீட்பு பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இருப்பினும் மழை மீட்பு பணியில் அரசு எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ எபினேசர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார். அப்போது எம்எல்ஏவை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டபோது வராமல் மழைநீர் வடிந்த பின்பு எதற்காக இங்கு வந்தீர்கள்? என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
எம்ஏல்ஏ ஆதரவாளர்களும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதற்கிடையே, கோபமடைந்த எம்எல்ஏ எபினேசர் பொதுமக்களை நோக்கி பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அவரை போலீஸாரும், அவரது ஆதரவாளர்களும் தடுத்து நிறுத்தினராம். மேலும், கேள்வி கேட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாலமுரளி (37) என்பவரை எம்எல்ஏ ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
வைரலான விடியோ: காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின், இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில், 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வழக்கானது எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இதற்கிடையே, எம்எல்ஏ எபினேசர் பொதுமக்களுடன் வாக்குவாதம் செய்வது போன்றும், ரத்தக் காயத்துடன் ஒருவர் இருப்பது போன்றதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.