

போபால்: மத்திய பிரதேசத்தின் குணா நகர், ராதாபூர் காலனியை சேர்ந்தவர் மிருதுஞ்சய் ஜடோன். சில நாட்களுக்கு முன்பு அவர், அங்குள்ள கடையின் முன்பு அமர்ந்து நொறுக்கு தீனி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது இரு நாய்க்குட்டிகள் அவருக்கு அருகே சென்றன.
ஆத்திரமடைந்த அவர், ஒரு நாய்க்குட்டியை கையால் தூக்கி ஓங்கி தரையில் வீசினார். பின்னர் அந்த நாய்க்குட்டியை கால்களால் மிதித்து மிகக் கொடூரமாக கொலை செய்தார். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அவரது கொடூர செயல் பதிவானது. கடந்த 9-ம் தேதி சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதை பார்த்து மனமுடைந்த மக்கள், முதல்வர் சிவராஜ் சிங்கிடம் சமூக வலைதளம் வாயிலாக முறையிட்டனர். அவரது உத்தரவின்பேரின் போலீஸார் விசாரணை நடத்தி, மிருதுஞ்சய் ஜடோனை நேற்று கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கொடூரமான செயல் மனதை உலுக்குகிறது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.