

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கிய நிலையில் தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் வகையில், துபாயிலிருந்து சென்னை வந்தடைந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘ஆருத்ரா கோல்டு டிரெடிங்’ என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனம், 1,09,255 பேரிடம், ரூ.2,438 கோடி வரை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 10-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி முடக்கப்பட்டது. மேலும், சொத்துகளும் முடக்கப்பட்டன. இந்த வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் ஆருத்ரா நிறுவனம் தொடர்புடையவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி பலமுறை அவருக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர்களே ஆஜராகி, விளக்கம் அளித்து வந்தனர். இந்த விவகாரத்தில் ஆர்.கே.சுரேஷ் டிச. 12-ம் தேதி (நாளை) போலீஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும். அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்துவந்த ஆர்.கே.சுரேஷ் நேற்று காலை துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவரிடம் விமான நிலையத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். நாளை போலீஸார் முன்னிலையில் ஆஜராக உள்ளதாக அப்போது அவர் தெரிவித்ததையடுத்து, அவரை அங்கிருந்து செல்ல சுங்கத் துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.