

சென்னை: கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ஆழ்வார்திருநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரவி (39). இவர் நெற்குன்றம், சக்திநகர் 8-வது தெருவில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். கடந்த 8-ம்தேதி இரவு பூசாரி ரவி, பூஜைமுடித்து கோயிலை பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கோயில் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்தகாணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த ரவி, இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்கு பதிந்துவிசாரணை நடத்தினர். முதல்கட்டமாக சம்பவ இடத்தை சுற்றியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த விக்கி (22) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி ஒருவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். விக்கி மீது ஏற்கெனவே திருட்டு, வழிப்பறி, கஞ்சா என சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.