

பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி அருகே சொகுசு கார் சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி தீ பிடித்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இத்துயர சம்பவம் சனிக்கிழமை இரவில், பரேலி - நைனிதால் சாலையில் துபவுரா கிராமத்துக்கு அருகே நடந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சுஷில் சந்திரபன் கூறுகையில், "சொகுசு காரின் டயர் திடீரென பஞ்சரானதால் வண்டி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பைத் தாண்டி சாலையின் மறுபுறம் சென்று எதிரே வந்த லாரியின் மீது மோதி தீ பிடித்து எரிந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தபோது கார் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் காருக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை. விபத்துக்குள்ளான கார் சுமித் குப்தா என்பவருக்குச் சொந்தமானது. அவர் அதை ஃப்ரகான் என்பவருக்கு கொடுத்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.