

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கும்பகோணம் மாதுளம்பேட்டை ராமகிருஷ்ணா நகரைச்சேர்ந்தவர் சங்கர் மகன் சக்திவேல்(23). மாதுளம்பேட்டை சந்திரன் நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(28). தங்களது பகுதியில் அதிகாரம் செய்வது தொடர்பாக இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2019 ஜன. 13-ம் தேதி இரவு வீட்டிலிருந்த சக்திவேலை சமாதானம் பேசுவதற்காக தமிழ்ச்செல்வன் தரப்பினர் அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்கள் சக்திவேலை அடித்துக் கொன்று, அப்பகுதியில் உள்ள சாக்கடைத் தொட்டியில் உடலை வீசிச் சென்றனர்.
இது தொடர்பாக சக்திவேலின் தாய் சங்கீதா அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, தமிழ்ச்செல்வன், அவரது கூட்டாளிகளான மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணிமாறன் (எ) காளிதாஸ் (27), கார்த்தி (30), காளியாப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்த ராஜகுரு(29), எல்லையாச் செட்டித் தெருவைச் சேர்ந்த ராஜகோபால்(26), ராஜாராம் காலனியைச் சேர்ந்த விஜய்(எ) ஊத்து விஜய், பரணிதரன் ஆகிய 7 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
2019 மே 25-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 15 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜரானார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பரணிதரன் மற்றும் விஜய் (எ) ஊத்து விஜய் ஆகியோர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, தண்டனை பெற்ற 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.