

மதுரை: மதுரை பசுமலை அருகேயுள்ள மூலக்கரை விநாயக நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், சிம்மக்கல் வக்கீல் புதுத் தெருவில் உள்ள ஐடிபிஐ வங்கியின் செயலாக்கப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் கவரிங் நகைகளை தனதுதங்கை, மனைவி பெயர்களில் அடகுவைத்து, ரூ.9 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. மேலும், ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தபோது, மொத்த தொகையில் ரூ.39 லட்சத்து 19,400 குறைவாக இருந்ததும், அந்த தொகையை சுரேஷ் தனது மனைவி, தாயார் பெயர்களுக்கு மாற்றி மோசடி செய்ததும் தெரியவந்தது.
இவ்வாறு மோசடி செய்த ரூ.48 லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக விசாரணையில் சுரேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து வங்கியின் உதவிப் பொதுமேலாளர் பேருக்கினியன், மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், வங்கியின் செயலாக்கப் பிரிவு மேலாளர் சுரேஷ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக வங்கி ஊழியர்களான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூதுலட்சுமணன், சியர்லடினா சுமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களைத் தேடி வருகின்றனர்.