

மதுரை: மோசடி வழக்கில் போலீசார் தேடி வந்த பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரணவ் ஜூவல்லரி என்ற பெயரில் நகை கடைகள் தொடங்கி மாதாந்திர நகை சேமிப்பு சீட்டு திட்டம் நடத்தப்பட்டது. தீபாவளியின் போது சீட்டு பணம் திரும்ப அளிக்காமல் திடீரென கடைகள் மூடப்பட்டது இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில், பிரணவ் ஜூவல்லரி நகை சேமிப்பு திட்ட மோசடி குறித்து மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா மதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை (டிச. 7) அன்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மதன் செல்வராஜ் நேரில் சரண் அடைந்தார்.
அவரை டிச. 21 வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். மதன் செல்வராஜை கைது செய்ய அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.