

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள நகைப் பட்டறையில் 6.5 கிலோ திரவ நிலையிலான தங்கம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தியாகராய நகர் ராமேசுவரம் சாலையில் வசிப்பவர் நந்த குமார் ஜக்தாப் (43). இவர், தனது வீட்டின் தரைத் தளத்தில், நகை கடைகளின் பழைய நகைகளை வாங்கி, உருக்கி, புது நகைகளாக மாற்றிக் கொடுக்கும் நகைப் பட்டறையை நடத்தி வருகிறார். இவரது நகைப் பட்டறையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 6 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல நகை பட்டறையை நந்த குமார் திறந்தார். அப்போது, பட்டறையில் தங்க நகைகளை உருக்கி திரவமாக வைத்திருந்த 6.5 கிலோ எடையுள்ள திரவ தங்கத்தை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் கடை ஊழியர்களை அழைத்து விசாரித்தார். அவர்கள்தங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, நகைப் பட்டறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, இரவு நேரத்தில் முக மூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திரவ தங்கத்தை பிளாஸ்டிக் கேன் ஒன்றில் ஊற்றி எடுத்துச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இது குறித்து நந்த குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடை ஊழியர்கள் 6 பேரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நகை பட்டறையில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பணி செய்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சோம் நாத் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு நகைக் கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.