ஓசூரில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 3 பேர் கைது: வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்க டிஎஸ்பி அறிவுறுத்தல்

ஓசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர்.
ஓசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர்.
Updated on
1 min read

ஓசூர்: ஓசூரில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க டிஎஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.

ஓசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ராயக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து வீலிங் செய்வதாக போலீஸாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து, ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் டிஎஸ்பி பாபு பிரசாத் தலைமையிலான போலீஸார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த முகமது அப்ரார் (22), அபு பக்கர் (23) மற்றும் அட்கோ பகுதியைச் சேர்ந்த சையது முகமது அலி (19), ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், 3 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்து வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோல, வீலிங் செய்த 3 சிறுவர்களின் பெற்றோர் மற்றும் வாகனத்தைக் கொடுத்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிறுவர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க தடை விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். வீலிங் செய்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக டிஎஸ்பி பாபு பிரசாத் கூறியதாவது: "பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்யும் இளைஞர்களை வீடியோ எடுத்து, 63832 91232 என்ற வாட்ஸ் - அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். ஓசூர் பகுதியில் வீலிங் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.". இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in