Published : 29 Nov 2023 04:04 AM
Last Updated : 29 Nov 2023 04:04 AM
மதுரை: மதுரை பெருங்குடி சங்கையா கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவரது பேரன் சர்வின் ( 6) இக்குழந்தைக்கு நேற்று உடல் நலமின்மையால் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மாரி, சசி குமார் ஆகியோர் போதையில் ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது. இவர்களை பெரியசாமி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரி, சசி ஆகியோர் அரிவாளால் வெட்டியதில் சிறுவன் சர்வினுக்கு வெட்டு விழுந்தது. தொடர்ந்து பெரிய சாமி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த அப்பகுதியைச் சேர்ந்த கணபதி (26), விஜய குமார் (27), அஜித் (28) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி சங்கையா கோயில் தெரு மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் காளிமுத்து, அரச முத்து பாண்டியன், பாண்டியம்மாள் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தெற்குவாசல் காவல் உதவி ஆணையர் ராம கிருஷ்ணன், திருமங்கலம் டிஎஸ்பி வசந்த குமார், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் விமான நிலையச் சாலைப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT