

புதுச்சேரி: ஒரு தலை காதல் விவகாரத்தால். தனியார் பாரில் நாட்டு வெடிகுண்டு வீசியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி - விழுப்புரம் மெயின் ரோடு பங்கூர் பகுதியில் உள்ள தனியார் பாரில் நாட்டு வெடி குண்டு வீசியுள்ளதாக நேற்று முன்தினம் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப் - இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அப்போது அரியூர் பாரதி நகரைச் சேர்ந்த செல்வா என்பவர் நடந்து வந்து, தனது பாக்கெட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டை எடுத்து பாரின் ஷட்டர் மீது வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாரின் கேஷியர் பிரபு புகார் அளித்ததின் பேரில் வில்லியனூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
"நாட்டு வெடி குண்டை வீசிய செல்வா, அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியும் இது தொடர்ந்தது. இதையறிந்த பெண்ணின் உறவினர் ஒருவர் செல்வாவை கண்டித்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நபரை பழிவாங்கும் எண்ணத்தில் செல்வா இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பங்கூரில் உள்ள பாரில் அந்த நபர் மது அருந்துவதாக செல்வாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று அவரை மிரட்ட செல்வா நாட்டு வெடி குண்டை பாரின் மீது வீசியுள்ளார். தலைமறைவாக உள்ள செல்வாவை தேடி வருகிறோம்" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.