

மும்பை: இந்திய கடற்படையில் அக்னி வீரராக பயிற்சி பெற்று வந்த 20 வயது இளம் பெண் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "தற்கொலை செய்து கொண்ட பெண் கேரளாவைச் சேர்ந்த அபர்ணா நாயர். அவர் கடற்படை பயிற்சிக்காக மும்பை வந்திருந்தார். அவர் மலாடின் மேற்குபுறநகர் பகுதியின் மல்வானி பகுதியில் உள்ள ஐஎன்எஸ் ஹாம்லாவில் பயிற்சி பெற்றுவந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அபர்ணாவை பரிசோதனை செய்ய கடற்படை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்" என்று போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து மும்பை மல்வானி போலீஸார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்னிபாதை திட்டம்: ராணுவத்தில் பணியாற்றுவதற்காக கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 14ம் தேதி அக்னிபாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவ்வீரர்கள் நான்கு ஆண்டுகள் பணியாற்றுவார்கள். இதில் ஆறு மாதங்கள் பயிற்சியும், மூன்றரை ஆண்டுகள் வீரர்களாகவும் பணியாற்றுவார்கள். ஓய்வுக்கு பின்னர் இவ்வீரர்கள் ஆயுதப்படைகளில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.