Published : 26 Nov 2023 04:04 AM
Last Updated : 26 Nov 2023 04:04 AM
சென்னை: மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக சென்னையில் 2 அமெரிக்க இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்த 2 அமெரிக்க இளைஞர்கள், அங்குள்ள பாரில் மது அருந்தி உள்ளனர். போதை அதிகமானதும் இருவரும் பாரில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து, ஓட்டல் நிர்வாகம், பாது காவலர்கள் உதவியுடன் 2 இளைஞர்களையும், ஆட்டோவில் ஏற்றி, அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெமினி மேம்பாலம் சிக்னல் அருகே வந்த போது, திடீரென ஆட்டோவில் இருந்து குதித்த அமெரிக்க இளைஞர் ஒருவர், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள், அந்த இளைஞரை திருப்பி தாக்கினர். பின்னர், சாலையோர நடைபாதையில், அந்த இளைஞரை பிடித்து அமர வைத்து, போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீஸார், போதையில் இருந்த அமெரிக்க இளைஞர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸில் ஏற்றினர். அப்போது, ஒரு இளைஞர் ஆம்புலன்ஸில் ஏறாமல், திடீரென கத்திக் கொண்டே சாலையில் ஓடினார். அப்பகுதியில் சென்று கொண்டிருந்த இளைஞர்களின் உதவியோடு, அந்த நபரை பிடித்த போலீஸார், ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், சாலையில் ரகளையில் ஈடுபட்டது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ், மெல்கார் என்பதும், நுங்கம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் நடந்த பார்ட்டியில் அதிக அளவில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும், தெரிவித்தனர்.
இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களை கைது செய்தனர். இது குறித்து அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இளைஞர்கள் சாலையில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT