

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு காந்தி தெருவை சேர்ந்தவர் முரளி (44). சென்னை தனியார் தபால் சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். முரளியின் வீட்டுக்கு அருகே அவரின் பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தினர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதில், முரளியின் பெரியப்பா மகன் ரவீந்தர், நிலம் தொடர்பாக அடிக்கடி முரளியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் முரளி நேற்று பகல் 12 மணியளவில், மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முகவர்களிடமிருந்து தபால்களை சேகரித்துக் கொண்டு, அத்திப்பட்டு ரயில் நிலையத்தில், சென்னை செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறினார்.
அப்போது, முரளியை பின்தொடர்ந்து சென்ற ரவீந்தர், ஓடும் ரயிலில் சக பயணிகள் கண்முன்னே முரளியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த முரளியை ரயில் பயணிகள் மீட்டு, மருத்துவமனைக்கு செல்வதற்காக அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் இறக்கினர். அப்போது அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ரவீந்தரை, ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மடக்கி பிடித்தார். இந்நிலையில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திலேயே முரளி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த சென்னை- கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார், முரளியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ரவீந்தரை கைது செய்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.