Published : 24 Nov 2023 04:00 AM
Last Updated : 24 Nov 2023 04:00 AM

இருளர் பழங்குடி பெண்ணுக்கு விஏஓ செல்போன் மூலம் பாலியல் தொல்லை: விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார்

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறவினர்களுடன் புகார் மனு அளிக்க வந்த இருளர் பழங்குடி பெண்.

விழுப்புரம்: விதவை சான்று கேட்டு வந்த இருளர் பழங்குடி பெண்ணுக்கு, செல்போன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கீதா (28). சங்கீதாவின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், 11 வயது மகன் கமலேஷூடன் தனியாக வசித்து வருகிறார். அவர் தனது உறவினர்களுடன் நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

இது குறித்து சங்கீதாவின் உறவினர்கள் கூறியதாவது: கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் என்பவரை சங்கீதா அணுகியுள்ளார். இதற்கு அவர் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் தன்னிடம் இருந்த ரூ. 3 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

சங்கீதாவிடம் செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், அதன் பிறகு சங்கீதாவின் செல்போன் எண்ணில் அடிக்கடி தொடர்பு கொண்டு தனியாக வரும்படி அழைத்துள்ளார். இதனையறிந்த சங்கீதாவின் சகோதரர் சூர்யா, கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் சங்கீதாவிடம் அவரது கணவரின் இறப்பு சான்றிதழை வழங்கிய கிராம நிர்வாக அலுவலர், அதன் பிறகு விதவை உதவித் தொகைக்கான சான்றிதழை வழங்காமல் இழுத்தடித்துள்ளார். இது தொடர்பாக சங்கீதாவுக்கு அடிக்கடி செல்போன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய தாஸ் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x