

சென்னை: அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை விநியோகித்த 6மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆய்வுகளில், விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த 6 மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதோடு அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விநியோகம் செய்த 6 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இத்துறை மூலம் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடிமைபழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.