Published : 22 Nov 2023 04:12 AM
Last Updated : 22 Nov 2023 04:12 AM

கோடநாடு வழக்கு | பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் தடயவியல் ஆய்வு முடிவுகளை விரைவாக பெற நடவடிக்கை: சிபிசிஐடி போலீஸார்

கோவை: கோடநாடு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, செல்போன்களின் தடயவியல் ஆய்வு முடிவுகளை விரைவாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இங்கு நடந்த கொள்ளை முயற்சியின் போது காவலாளி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்தனர். பின்னர், மேற்கு மண்டல ஐ.ஜி தலைமையிலான தனிப்படையினர் விசாரித்தனர்.

தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. கூடுதல் எஸ்பி தலைமையிலான கோவை சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இவ்வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.'

கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சந்தேகத்துக் குரிய நபர்கள்,முன்னரே கைது செய்யப்பட்டவர்கள், முன்னரே விசாரிக்கப்பட்டவர்கள் என பலரிடம் சம்மன் அனுப்பி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு பகுதி மலைப் பகுதி என்பதால், பிஎஸ்என்எல் நெட் வொர்க் அதிகம் பயன்படுத்தப்பட்டது. எனவே, அந்த தொலை தொடர்பு நிறுவனத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகளின் விவரங்களை திருச்சியில் உள்ள அதன் அலுவலகத்தில் இருந்து போலீஸார் சேகரித்திருந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கனகராஜ் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இருந்தன. அந்த செல்போன்களை விசாரணைக்காக தங்களிடம் தர வேண்டும் என சிபிசிஐடி போலீஸார் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டிருந்தது.

அதன் படி, அந்த செல்போன்களும் சமீபத்தில் சிபிசிஐடி போலீஸாரிடம் வழங்கப்பட்டன. அந்த செல்போன்களில் பதிவாகியுள்ள தகவல்களை பெறும் வகையில் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வகத்தில் இருந்து தகவல்களை விரைவில் பெற்று கைதானவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதும், செல்போனில் பதிவான தகவல்களும் ஒத்துப்போகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

இது குறித்து சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூறும் போது,‘‘கோடநாடு வழக்கில் தொலை தொடர்பு நிறுவனத்தின் மூலம் டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தகவல்களை திரட்ட மும்பையில் இருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற குழுவினர் விரைவில் வர உள்ளனர். மேலும், ஆய்வுக்காக தடயவியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள, 8 செல்போன்களில் இருந்த தகவல்களையும் விரைவாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x