

சென்னை: சென்னையில் செயல்படும் அமெரிக்க துணை தூதரகத்தில் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியைச் சேர்ந்த ஹேம்நாத் (24) என்பவர் விசா பெறுவதற்காக விண்ணப்பித்தார். இதையடுத்து அவர் கடந்த 16-ம் தேதி நேர்முகத் தேர்வுக்காக அமெரிக்க துணை தூதரகத்துக்கு அழைக்கப்பட்டிந்தார். ஹேம்நாத், கொடுத்த பி.டெக்.கல்விச் சான்றிதழ்களை தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆய்வில் அவை போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து, ஹேம்நாத்திடம் தீவிரமாக விசாரித்தனர்.
போலி சான்றிதழ்களை ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரி ஹரிபாபு (35) என்பவர் தயாரித்து வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஹரிபாபுவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பி.டெக். முடித்த ஹரிபாபு, மும்பையில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் சிறிது காலம் மென்பொறியாளராக வேலை செய்ததும்,அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் நரசராவ்பேட்டை பிரகாஷ் நகரில்எக்கோ ஓவர்சீஸ் கன்சல்டன்சி என்றபெயரில் அலுவலகத்தை திறந்து, அதன்மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சிப்பவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ்களை தயாரித்து வழங்கி, அதிகபணம் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் அலுவலகத்தில் இருந்து ஒரு கணினி, பிரின்டர், 3 ஹார்டுடிஸ்க், ஸ்கேனர், 2 மடிக் கணினி, 3 செல்போன்கள்,போலி சான்றிதழ்கள்,ரூ,2 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.