

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபரின் ஜெராக்ஸ் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாங்குநேரி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சந்நிதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (50). நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சியின் நிருபராகவும் உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வானமாமலை மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று காலை 9 மணியளவில் கடையை திறந்து உள்ளே சென்று பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கடை மீது நாட்டு வெடி குண்டை வீசினர். ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்காததையடுத்து மீண்டும் ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினர். அது கடையின்முன் விழுந்து வெடித்தது. இதில் கடையின் பிளக்ஸ் பேனர் உள்ளிட்ட சில பொருட்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்ததால், 3-வதாக வீசுவதற்கு எடுத்த நாட்டு வெடிகுண்டை அதே இடத்தில் போட்டு விட்டு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், நாங்குநேரி டிஎஸ்பி அசோக் மற்றும் போலீஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர். வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடி குண்டை நிபுணர்கள் கைப்பற்றினர்.
போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதனிடையே இச் சம்பவம் தொடர்பாக நாங்குநேரி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். நாங்குநேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிளஸ் 2 மாணவரும், அவரது சகோதரியும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பான செய்தியை வெளியிட்டது தொடர்பான விரோதத்தால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.