

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோன்றாம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (23), திருப்பத்தூர் தென்றல் நகரைச் சேர்ந்த பரத் (35). இவர்கள் இருவரும், திருப்பத்தூரில் உள்ள பிரபல நகைக் கடையில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முகூர்த்த நாளையொட்டி நகைக் கடையில் வியாபாரமான ரூ.60 லட்சத்தை, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் செலுத்த அஜித்குமார் மற்றும் பரத் ஆகியோர் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் பணத்தை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது, இவர்களை பின் தொடர்ந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் புதுப்பேட்டை பிரதான சாலை அருகே அஜித்குமார் மற்றும் பரத் ஆகிய இருவர் முகத்திலும் மிளகாய் பொடியை தூவினர். இதில், கண்ணில் மிளகாய் பொடி விழுந்ததால் கண் எரிச்சலால் இருவரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
உடனே, மர்ம நபர்கள் நகைக் கடை ஊழியர்களிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். ஆனால், பணத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு அஜித்குமார், பரத் ஆகிய 2 பேரும் கத்தி கூச்சலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதைப்பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பொதுமக்கள் திரண்டதால் ரூ.60 லட்சம் தப்பியது.
அஜித்குமார் மற்றும் பரத் இருவருக்கும் காயம் ஏற்பட்டதால் 2 பேரும் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நகைக் கடை உரிமையாளர் கவுசிக் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க டிஎஸ்பி விஜய குமார் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவிட்டார்.
தனிப்படை காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு, திருப்பத்தூர் நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.60 லட்சம் வழிப்பறி செய்ய முயன் றவர்கள், திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (28), செலந்தம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (26), முத்தமிழ் நகரைச் சேர்ந்த சுரேஷ் (28), வேலன் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (35), கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரவிசங்கர் (37) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, காவல் துறை யினர் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட 5 பேரையும் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவல் துறையினருக்கு, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருப்பத்தூர் எஸ்.பி.ஆல்பர்ட்ஜான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.