Published : 21 Nov 2023 06:10 AM
Last Updated : 21 Nov 2023 06:10 AM
கிருஷ்ணகிரி: தங்களிடம் முதலீடு செய்தால் அதிகலாபம் தருவதாகக் கூறி, ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பல கோடி மோசடி செய்துள்ளதாக கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோட்டைச் சேர்ந்த நவீன்,விருதுநகரைச் சேர்ந்த முத்துச்செல்வன் ஆகியோர், ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு, ‘யூனிக் எக்ஸ்போர்ட்’நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இந்நிறுவனத்தின் முகவர்களான, போச்சம்பள்ளி அருகேஉள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தஅரசுப் பேருந்து ஓட்டுநர் திருமால்,அவரது மனைவி அம்பிகா, முன்னாள் ராணுவ வீரர் நீலமேகம் உள்ளிட்ட சிலர் எங்களை அணுகினர். யூனிக் எக்ஸ்போர்ட் நிறுவனம் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதாகவும், அந்தநிறுவனத்தில் மூதலீடு செய்தால் கிடைக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
பொருளாதார வீழ்ச்சி... குறிப்பாக, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதை நம்பி நாங்கள் முதலீடு செய்தோம். தொடக்கத்தில் எங்களுக்கு பணம் வழங்கியதால், பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்தோம். 2018 முதல் 2021 வரை முதலீட்டுத் தொகைக்கு மாதந்தோறும் பணம் வழங்கினர். இதற்கிடையில், இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த நிறுவனத்தினர், முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனர். தமிழகம் முழுவதும் முகவர்கள் மூலம் பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடாகப் பெற்று, ஏமாற்றியுள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரித்து, எங்கள் பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் புகார் அளிக்கலாம்: இது தொடர்பாக கிருஷ்ணகிரிபொருளாதாரக் குற்றப் பிரிவுபோலீஸார் கூறியதாவது: வெங்காயம் ஏற்றுமதி மூலம்வருவாய் தருவதாகக் கூறி, முகவர்கள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வந்தனர். இது தொடர்பாக ஏற்கெனவே ஈரோடு மாவட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே,ஈரோட்டில் புகார் அளிக்குமாறு கூறி, அவர்களை அனுப்பி வைத்தோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT