

சென்னை: சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுக்கூடம் மற்றும் தனியார் பார்கள் இரவு 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி உள்ளது. ஆனால், நட்சத்திர விடுதிகளில் உள்ளபல பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி,அதிகாலை வரை கூட திறந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீஸார் மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீஸார் இதை கண்காணித்து, தடையை மீறும் பார்உரிமையாளர்கள், நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நந்தனம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் பார் ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும், இளைஞர்களும் நேற்று முன்தினம் இரவு மது போதையில், அரை குறை ஆடையுடன் நடனம் ஆடுவதாக புகார் எழுந்தது. தகவல் அறிந்து சைதாப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் வருவதை அறிந்ததும் ஆட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதறியபடி வெளியேறினர்.
இந்நிலையில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முகத்தை மறைத்தவாறு மதுபோதையில் ஓட்டம் பிடிக்கும் வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தனியார் மதுபாரில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி அதைமையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.