

பூந்தமல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.7.64 லட்சம் மோசடி செய்த முதியவருக்கு, 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், சிடிஎச் சாலை பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன். இவருக்கு கடந்த 2002-ம் ஆண்டு ஆவடி அருகே உள்ள மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த ஏழுமலை (65) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.
அப்போது ஏழுமலை, தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் ஆவடி- மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணி வாங்கித் தருவதாக மதுரைவீரனிடம் கூறியுள்ளார். இதை நம்பிய மதுரைவீரன், அவருடைய நண்பர்கள், உறவினர்கள், வேலைக்காக ரூ.7.64 லட்சத்தை ஏழுமலையிடம் அளித்துள்ளனர். ஆனால், ஏழுமலை உறுதியளித்தபடி, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்துள்ளார்.
குற்றம் நிரூபணம்: இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஏழுமலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி- ஜே.எம்- 1 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சரத்பாபு வாதிட்டார். சமீபத்தில் முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், ஏழுமலை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, பூந்தமல்லி ஜே.எம்-1 நீதிமன்ற நீதிபதி ஸ்டாலின் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஏழுமலைக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6.34 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.