

சென்னை: சென்னை அபிராமிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்த ஐ.டி நிறுவன ஊழியருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சி.பி.ராமசாமி சாலை பீமண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே நேற்று முன்தினம் மதியம் தமிழக முதல்வரின் வாகனம் செல்ல இருந்தது.
ஐ.டி நிறுவன ஊழியர்: இதையடுத்து, அந்த பகுதி முழுவதும் முதல்வரின் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. அப்போது, ஐ.டி நிறுவன ஊழியரான ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அஜய்குமார் (28) என்பவர் திடீரென கட்டுப்பாட்டை மீறி முதல்வரின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருசக்கர வாகனத்தில் நுழைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வரின் பாதுகாப்பு பிரிவு போலீஸார் உடனடியாக இதுகுறித்து போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடம் விரைந்த போக்குவரத்து பிரிவு போலீஸார் அஜய்குமாரை தடுத்து நிறுத்தினர். மேலும், அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.