Published : 19 Nov 2023 04:06 AM
Last Updated : 19 Nov 2023 04:06 AM
திருப்பூர்: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் என்று கூறி மோசடியாக பணம் பறித்த கோவை தம்பதியை காங்கயத்தில் போலீஸார் கைது செய்தனர்.
காங்கயம் - தாராபுரம் சாலை களிமேடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் சிவசாமி என்பவரின் மனைவி தனலட்சுமி (43). இவர், நேற்று முன்தினம் கடையில் இருந்தபோது, காரில் ஆண், பெண் ஆகியோர் வந்து இறங்கினர். கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என கூறி, உங்கள் கடையில் பாலித் தீன் பைகள் பயன்படுத்துகிறீர்களா? புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, ரூ. 2 ஆயிரத்து 500 பணம் அளிக்கும்படி மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, கடையில் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ. 2500-ஐ தனலட்சுமி அளித்துள்ளார். பணத்தை பெற்ற கையோடு 2 பேரும் காரில் அங்கிருந்து பறந்தனர். இதில் சந்தேகமடைந்த தனலட்சுமி, அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்தார். அப்போது, மற்ற கடைகளுக்கு இதுபோல் யாரும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு கணவருக்கு தெரியப் படுத்தினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காரின் எண்ணைக் கொண்டு காங்கயம் போலீஸார் தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, காங்கயத்தில் மற்றொரு மளிகைக் கடையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எனக் கூறி மோசடியாக பணம் பறித்துள்ளனர். இது தொடர்பாக காங்கயம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், அந்த கடைக்கு சென்று விசாரித்தனர். அதில் முன்னுக்கு பின் முரணாக பேசவே, அவர்கள் போலி அதிகாரிகள் என்பதும், கோவையை சேர்ந்த சக்திவேல் (24), அவரது மனைவி சத்திய பிரியா (23) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து, தம்பதியை கைது செய்தனர். கூலி வேலைக்கு சென்று கொண்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகாரிகள் என்று கூறி பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT