Published : 19 Nov 2023 04:12 AM
Last Updated : 19 Nov 2023 04:12 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாய்மாமனின் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா(22). இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் வந்த சர்மிளா, தச்சங்குறிச்சியில் உள்ள தாய்மாமன் பிரபு வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், தச்சங்குறிச்சி அருகேயுள்ள நாட்டாணியில் நேற்று முன்தினம் உறவினர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிரபு உள்ளிட்டோர் சென்று விட்டனர்.
வீட்டில் இருந்த சர்மிளா, தன்னையும் வந்து அழைத்துச் செல்லுமாறு பிரபுவிடம் செல்போன் மூலம் கூறினார். தன்னால் வர முடியாத நிலையில் இருந்த பிரபு, தன் வீட்டுக்கு அருகே வசிக்கும் நண்பர் ஆறுமுகம் மகன் கருப்புசாமியை (30) அனுப்பி வைத்தார். இதையடுத்து, சர்மிளாவை, கருப்புசாமி இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்று கொண்டிருந்தார். இதனிடையே, சர்மிளாவின் செல்போனுக்கு பிரபு தொடர்பு கொண்டபோது, இருவரும் நாட்டாணி அருகே வந்து கொண்டிருப்பதாக கூறினார்.
ஆனால், வெகு நேரமாகியும் நாட்டாணிக்கு வராததால் சந்தேகமடைந்த பிரபு, மீண்டும் சர்மிளாவுக்கும், கருப்புசாமிக்கும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், இருவரது செல்போன்களும் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்ததால், அவர்களை பிரபு உள்ளிட்டோர் தேட தொடங்கினர். தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னம்பட்டி முதலைமுத்துவாரி பகுதியில் சர்மிளா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து பிரபு வல்லம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கருப்புசாமியை நேற்று பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், சர்மிளாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது, அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கருப்புசாமி கூறியுள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட கருப்புசாமி கட்டிட தொழிலில் ஈடுபட்டு வருவதும், அவருக்கு திருமணமாகி ஓராண்டான நிலையில், அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT