Published : 18 Nov 2023 06:20 AM
Last Updated : 18 Nov 2023 06:20 AM
சென்னை: சென்னை வந்த இலங்கை தொழில்அதிபர் ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்டார். கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் கடந்த 15-ம் தேதி இரவு 8.45 மணிக்கு போன் அழைப்பு ஒன்றுவந்தது. எதிர்முனையில் பேசிய இளம் பெண் ஒருவர், ``தான்இலங்கையிலிருந்து பேசுவதாகவும், தனது தந்தை முகமது ஷியாம் (50) பாக்கு மற்றும் பாக்கு மட்டை வியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரம் தொடர்பாக இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து பாரிமுனையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அவர் தங்கி இருந்ததாகவும், அங்கிருந்து தந்தையின் செல்போன் மூலம் பேசிய நபர், தனது தந்தையைக் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.15 லட்சம் பணம் அனுப்பினால் விடுவிப்பதாகவும், இல்லை என்றால் கொலை செய்துகடலில் வீசிவிடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே, எனது தந்தையைக் காப்பாற்றுங்கள்'' எனக்கூறி கதறி அழுதார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடத்தல் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில், கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் ராஜா சிங் விசாரணையில் இறங்கினார். கடத்தல்காரர்கள் வாட்ஸ்-அப் காலில் பேசியுள்ளனர். மேலும், கத்திமுனையில் முகமது ஷியாம் இருப்பது போல் வீடியோ கால் மூலமும் மிரட்டியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை, கைப்பற்றிய போலீஸார் அக்காட்சியின் பின்னணியில் உள்ள இடம் எங்குள்ளது என ஆராய்ந்தனர். மேலும்,சைபர் க்ரைம் போலீஸார் மூலம் செல்போன் டவர் இருப்பிடம் குறித்து ஆராயப்பட்டது.
இதில், முகமது ஷியாம் கே.கே.நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடத்தி அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து, அங்குவிரைந்த தனிப்படை போலீஸார் துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்கள் 7 பேரைக் கைது செய்ததோடு, கடத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை தொழில் அதிபர் முகமதுஷியாமையும் மீட்டனர். மேலும், கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை அண்ணாநகர் மேற்கு சித்ரா (43), ரியாஸ் அஸ்கர் (47), கே.கே.நகர் வேல்முருகன் (41), தினேஷ் (31), வளசரவாக்கம் ஹரிகிருஷ்ணன் (29), ராமாபுரம் சுரேஷ் (33), விருகம்பாக்கம் பாலசுப்பிரமணி (34) ஆகிய 7 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முன்னதாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தலுக்கான காரணம்: கடத்தப்பட்ட முகமது ஷியாம், தற்போது கைது செய்யப்பட்ட சித்ராவுக்கு தொழில் விவகாரத்தில் ரூ.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில்தான் வியாபாரம் தொடர்பாக சென்னை வந்த முகமது ஷியாமைதனது கூட்டாளிகள் மூலம் காரில்கடத்தியுள்ளார். அந்த 5 லட்சத்துக்கு வட்டியும் முதலுமாக ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். மிரட்டல் வீடியோவின் பின்னணியை அடிப்படையாக வைத்து தனிப்படை போலீஸார் துப்பு துலக்கிஇலங்கை தொழில் அதிபரை மீட்டதோடு, கடத்தல் கும்பலையும் உடனடியாக கைது செய்துள்ளனர் எனபோலீஸ் அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT