Published : 18 Nov 2023 06:10 AM
Last Updated : 18 Nov 2023 06:10 AM

செங்கல்பட்டு | பைக் சாகசம் செய்து வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகேயுள்ள மலைமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் கோகுல்(21). இவர், பரனூர் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வருகிறார். இவர், பரனூர் சுங்கச்சாவடி மற்றும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சிங்கப்பெருமாள் கோவில் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அந்த வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் வைராலாக பரவிய நிலையில், செங்கல்பட்டு தாலுகா மேற்கண்ட சம்பவம் தொடர்பாக கோகுலை கைது செய்தனர். மேலும், இவர்மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சாகசத்துக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோன்ற பைக் சாகசங்கள் செய்யும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x