

ஈரோடு: ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (56). கூலித் தொழிலாளி. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் தமிழழகன் (31) மற்றும் 19 வயது சுமைதூக்கும் தொழிலாளி ஆகியோர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது வாங்கி கொடுத்துள்ளனர். மது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் சேர்ந்து செல்வத்தை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். தொடர்ந்து சேலத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தமிழழகன் மற்றும் 19 வயது தொழிலாளியை கைது செய்தனர்.
அதிகரிக்கும் வன்முறை: தீபாவளியை ஒட்டி ஈரோடு மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்தது. அதேபோல், கோஷ்டி மோதல்கள், தகராறு, விபத்து, கொலை போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன. மதுபோதையால் வாகன விபத்துகள் ஏற்படும்போது விபத்துக்கான காரணத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக மட்டும் காவல்துறையினர் பதிவு செய்வதால், மதுபோதையால் வாகனம் ஓட்டிய தகவல் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கடந்த 5 நாட்களில் ஈரோடு நகரில் மட்டும், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், அசோகபுரம், பழையபாளையம், ராஜாஜிபுரம் பகுதிகளில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.