Published : 17 Nov 2023 06:25 AM
Last Updated : 17 Nov 2023 06:25 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் டூ வீலரில் வீலிங் சாகசம் செய்து பயணிகளை அச்சுறுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் டிடிஎப் வாசனின் வீலிங் சாகசத்தை பின்பற்றி இளைஞர்கள் பலரும் இவரை போன்ற எண்ணங்களிலேயே வீலிங் செய்தவாறே வாகனங்களை இயக்குவதும், சாகசங்களை நிகழ்த்துவதுமாக இருந்து வருகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கக் கூடியது. இந்தச் சாலையில் விபத்து நடக்காத நாளே கிடையாது எனலாம். அந்த அளவுக்கு பரபரப்பான சாலையாக இருந்து வருகிறது.
இந்தச் சாலையில் டூ வீலரில் வரும் இளைஞர்கள் பலரும் பார்க்கும்படி வீலிங் சாகசம் செய்து சாலையில் பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். இதனால் சாலையில் பயணம் செல்லும் பயணிகள், பயணம் செய்யவே அஞ்சி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலையில் டூ வீலரில் வலம் வந்த இளைஞர்கள் வீலிங் சாகசம் செய்து சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தும் சாகச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகியுள்ளது.
இதில் விதவிதமாக கலர் கலராக சட்டை அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன் சக்கரத்தை தூக்குவதும், இரண்டு கைகளையும் விட்டு வண்டி ஓட்டுவதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ரோந்து பணி காவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெரும் விபத்து நடக்கும் முன்பாக, இதுபோன்ற குற்றங்களைக் கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT