சாத்தான்குளத்தில் வீடியோ பரவியதால் திருடிய பைக்கை விட்டுச் சென்ற இளைஞர்!

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் இளைஞர் மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால், திருடிய மோட்டார் சைக்கிளை தேவாலய வாசல் முன்பு திருடன் நிறுத்திவிட்டு சென்றுவிட்டார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் பிரிட்டோ என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அப்போது மர்ம இளைஞர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளார். அந்த நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் போது வழியில், பிரிட்டோவின் சகோதரர் ராஜா என்பவர் பார்த்துள்ளார். உடனே அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளார்.

ஆனால், அந்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை பிரிட்டோ மற்றும் அவரது நண்பர்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற இந்த நபரை எங்காவது கண்டால் பிடியுங்கள் என அவர்கள் தகவல் பரப்பினர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு போலீஸாரும் தீவிரமாக தேடி வந்தனர். இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை திருடிய நபர், அந்த மோட்டார் சைக்கிளை நேற்று காலையில் சாத்தான் குளத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதனை அறிந்த பிரிட்டோ மற்றும் அவரது நண்பர்கள் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை மீட்டு வீட்டுக்கு எடுத்து வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in