

சென்னை: தனியாக வசித்த மூதாட்டியை கட்டிப்போட்டு கத்திமுனையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விருகம்பாக்கம், ஸ்ரீ ஐயப்பா நகர், 11-வது குறுக்கு தெருவில் ஆயிஷா சுல்தானா (73) என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டுக்குள் கடந்த 13-ம் தேதி முகமூடி அணிந்த2 பேர் மூதாட்டியை கட்டிப்போட்டு கத்தி முனையில் வீட்டில் வைத்திருந்த ஐந்தரைபவுன் நகையை கொள்ளையடித்து விட்டுத் தப்பினர். நீண்ட நேரத்துக்குப் பிறகு ஷெனாய் நகரில் வசிக்கும் அவரது மகள் ஷாயிதா (45) தாய் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அங்கு கட்டிப்போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையபோலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர். இதில், மூதாட்டி சுல்தானாவை கட்டிப்போட்டு வீட்டில் கொள்ளையடித்தது சேலம்மாவட்டம் சின்ன திருப்பதி, மீனாட்சி நகரைச் சேர்ந்த ஷாஜின் (40), அவரது கணவர்சித்திக் அலி என்ற பிரகாஷ் (40)என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைதுசெய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கொள்ளை பின்னணி: தனியாக வசிக்கும் வயதான தாய் சுல்தானாவை பராமரிப்பதற்காக, தனியார் நிறுவனம் மூலம் தற்போது கைதான ஷாஜின் (40) என்பவரை மகள் ஷாயிதா 3 நாட்களுக்கு முன் பணியமர்த்தியுள்ளார். மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த ஷாஜின், தனதுகணவருடன் சென்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகமூடி அணிந்து கத்தியைக் காட்டி நகையை பறித்துச் சென்றுள்ளனர் மேலும் விசாரணையில் ஷாஜின்மீது ஏற்கெனவே 3 மோசடி வழக்குகளும், அவரது கணவர் சித்திக் அலி மீது 2 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.