Published : 14 Nov 2023 06:28 AM
Last Updated : 14 Nov 2023 06:28 AM

அண்ணாநகரில் அதிவேகமாக சென்ற கார் மோதி கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

அண்ணா நகரில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய கார் உருக்குலைந்து நிற்கிறது. (அடுத்த படம்)

சென்னை: அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார் மோதி கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகர் ரவுண்டானாவில் இருந்து அண்ணா நகர் 2-வது அவென்யூ நோக்கி நேற்று அதிகாலை 2.15 மணியளவில் அதிவேகமாகச் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 7 பேர் மற்றும் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. பின்னர், சூப்பர் மார்க்கெட் சுவரில் மோதி நின்றது. இதில் சாலையோர உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த கியூமர் (18), ஜான் நிஷா (18), விஜய்யாதவ் (21), தினேஷ்பாபு (21), கார்த்திக் (22), சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை செய்து வந்த அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த குமார் (52) மற்றும் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த நாகசுந்தரம் (74) ஆகியோர் விபத்தில் சிக்கினர்.

இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சூப்பர் மார்க்கெட் காவலாளி நாகசுந்தரம் (74) மற்றும் கல்லூரி மாணவன் விஜய்யாதவ் (21) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 2 இளைஞர்கள் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை அந்த வழியாகச் சென்றவர்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்ததில், பிடிபட்டவர் கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் தெருவைச் சேர்ந்த ஆசிப் (24) என்பது தெரியவந்தது. இவர், ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பது தெரியவந்தது. ஆசிப் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ரமணா மற்றும் பெண் தோழி ஒருவருடன் மது போதையில் உறவினரின் காரை ஓட்டிச் சென்றது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தற்போது ஆசிப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரமணாவை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

அசோக் பில்லர் பகுதியில்
விபத்தில் காயமடைந்த
மூதாட்டி.

இதேபோல் அதிவேகமாக வந்த கார் ஒன்று அசோக் பில்லரில் சாலையைக் கடக்க முயன்ற ஜெயம்மாள் என்ற மூதாட்டி மீது மோதியது. கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் மூதாட்டியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காரை ஓட்டி வந்த ஹரிஹரன் என்பவரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர். கார் பந்தயத்தின்போது விபத்து நடந்ததா எனவும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x