இமாச்சலப் பிரதேசத்தில் ஏஜென்டுகள் மூலம் ரூ.2,500 கோடி அளவுக்கு கிரிப்டோ கரன்சி ஊழல்

இமாச்சலப் பிரதேசத்தில் ஏஜென்டுகள் மூலம் ரூ.2,500 கோடி அளவுக்கு கிரிப்டோ கரன்சி ஊழல்
Updated on
1 min read

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.2,500 கோடி அளவுக்கு நடைபெற்ற கிரிப்டோ கரன்சி ஊழலில் சுமார் 1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இவர்களில் 5 பேர் அரசு ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் ‘கோர்வியோ காயின்’ அல்லது ‘கேஆர்ஓ காயின்’ என்ற பெயரில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்தவர், மற்ற நபர்களை இந்த திட்டத்தில் சேர்த்து விட்டதால், அவர்களுக்கு நல்ல கமிஷனும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பல ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான போலீஸாரும் இணைந்து ஏஜென்டுகளாக செயல்பட்டுள்ளனர். நல்ல கமிஷன் கிடைத்ததால், சிலர் போலீஸ் வேலைக்கு விஆர்எஸ் கொடுத்துவிட்டு, கேஆர்ஓ காயின்ஸ் திட்டத்தில் முதலீட்டாளர்களை சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி, ஹமிர்பூர் மற்றும் கங்க்ரா மாவட்டங்களில் 4 வழிச் சாலைக்காக அரசுக்கு நிலங்கள் கொடுத்து இழப்பீடு பெற்றவர்களை குறிவைத்து இந்த ஏஜென்டுகள் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளனர். அதிக லாபம் என ஆசை வார்த்தை கூறப்பட்டதால் கிரிப்டோ கரன்சியில் அரசு ஊழியர்கள் 5,000 பேர் வரை முதலீடு செய்துள்ளனர்.

போலி இணையதளங்கள் மூலம் கிரிப்டோ கரன்சியின் மதிப்பும் குறுகிய காலத்தில் உயர்த்தி காட்டப்பட்டுள்ளது. இதை நம்பி இமாச்சல் மக்கள் முதலீடு செய்தனர். இந்த முதலீட்டின் மதிப்பு ரூ.2,500 கோடி.

அதிக முதலீட்டாளர்களை பிடித்து கொடுக்கும் ஏஜென்டுகளை தாய்லாந்து, துபாய் என வெளிநாட்டு சுற்றுலாவுக்கு மோசடி கும்பல் அழைத்துச் சென்றுள்ளது. இது போல் 2 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாக்களில் ஏராளமானோர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்காக மட்டும் ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்களால் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்கள் பணத்தை இழந்துள்ளனர்.

இது குறித்து அதிகளவில் புகார் வந்ததால் இமாச்சல் போலீஸார் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட 18 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். இத்திட்டத்துக்கு தலைமை வகித்த சுபாஸ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். இந்த ஊழலில் ஈடுபட்ட 2-ம் கட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர் என இமாச்சல் டிஜிபி சஞ்சய் குண்டு கூறியுள்ளார். இதற்காக மத்திய நிதியமைப்புகளின் உதவிகளையும் இமாச்சலப் பிரதேச போலீஸார் நாடியுள்ளனர். கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது முறையற்ற முதலீட்டு திட்டத்தை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in