

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பெரிய தச்சூரில் பெருமாள் கோயிலில் கதவைத் திறந்து மிகவும் பழமை வாய்ந்த மூன்று ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே பெரிய தச்சூரில் இந்து அறநிலைத் துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. கோவில் அர்ச்சகராக நரசிம்மன் என்பவர் உள்ளார். நேற்று இரவு 8.30 மணிக்கு அர்ச்சகரின் தம்பி நடராஜன் என்பவர் கோயிலின் உள் கதவை பூட்டாமல் வெளிப்புறத்தில் மட்டும் பூட்டிச் சென்றுள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அர்ச்சகர் நரசிம்மன் பூஜை செய்ய கோவிலுக்கு சென்ற போது உள்புற கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 90 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்றரை அடி உயரத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளான பெருமாள், லட்சுமி, ஆண்டாள் சிலைகள் மூன்றும் காணாமல் போயிருந்தது.
இது பற்றி அர்ச்சகர் நரசிம்மன் பெரிய தச்சூர் போலீஸில் புகார் செய்ததன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் - இன்ஸ்பெக்டர் மருது, தடயவியல் நிபுணர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர். மோப்ப நாய் ராக்கி கோயிலில் இருந்து எசாலம் பிடாரிப்பட்டு சாலையில் இருளர் குடியிருப்பு வழியாக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. இது குறித்து பெரிய தச்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.