

கேரளா: கேரளாவில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கண்ணூா் மாவட்டத்தின் மட்டூல் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் 2 பேரை ஏற்றிக் கொண்டு, ஹெல்மட் அணியாமல் சென்ற இளைஞா் ஒருவா் செயற்கை நுண்ணறிவு கேமராவில் பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே இளைஞா் ஏற்கெனவே பலமுறை விதிமீறலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அந்த இளைஞரின் பெயரில் ஏற்கெனவே 155 சாலை விதிகள் மீறப்பட்டதற்கான அபராதத் தொகை நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணூர் போக்குவரத்து காவல்துறை, அந்த இளைஞருக்கு 86 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதோடு இளைஞரின் ஓட்டுநர் உரிமைத்தை ஓராண்டு தடைசெய்துள்ளது. மேலும் இளைஞர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது. பலமுறை அபராத தொகையை செலுத்துமாறு கடிதம் அனுப்பியும், அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் அந்த இளைஞர் அதை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து காவல்துறை இந்த அதிரடி முடிவை எடுத்ததாக தெரிகிறது.