

கோவில்பட்டி: கோவில்பட்டி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய இணைப்பு மற்றும் வணிகத்தில் இருந்து வீட்டு உபயோகமாக இணைப்பாக மாற்றுதல் உள்ளிட்டவைகளுக்கு பணம் பெறப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரை, ஆய்வாளர்கள் சுதா, அனிதா, உதவி ஆய்வாளர் தளவாய் மற்றும் போலீஸார் இன்று (நவ.9) காலை 12.30 மணிக்கு கோவில்பட்டி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து(50) அறைக்கு சென்றனர். அங்கு நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1,38,500 பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்த கிராமப்பகுதி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.6,800 சிக்கியது. மொத்தம் ரூ.1,45,300 கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் செயற்பொறியாளர் காளிமுத்துவிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செயற்பொறியாளர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் திண்டுக்கலில் மின்வாரிய உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு பதவி உயர்வு பெற்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.