

மேட்டூர்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் பணம் இழந்ததால், மேட்டூர் அடுத்த பண்ணவாடி காவிரி ஆற்றில் குதித்து ஓசூர் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பண்ணவாடியில் பாறையின் மீது செல்போன், காலணி, கடிதம், பை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவற்றை எடுக்க யாரும் வராததால், மீனவர்கள் கொளத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கிருந்த பொருட்களை கைப் பற்றி விசாரணை நடத்தினர்.
பொருட்களை வைத்திருந்த நபர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மீனவர்களைக் கொண்டு உடலை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். பின்னர், நள்ளிரவு ஒரு மணியளவில் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த கணேசன் (52) என்றும், நேற்று முன் தினம் மேட்டூரை அடுத்த கோவிந்த பாடியில் வசிக்கும் தாயை பார்க்க வந்ததும் தெரியவந்தது. கடன் தொல்லை, மன உளைச்சல் காரணமாக காவிரி ஆற்றில் குதித்து கணேசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனிடையே, கணேசன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கடிதத்தில், கணேசன் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ரூ.2 லட்சம் இழந்துள்ளார். மேலும், ராஜேஷ் கண்ணா என்பவருக்கு ரூ.8 லட்சம் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேணடும். 2-வது மகளின் படிப்புக்கு ரூ.3 லட்சம் தேவை இருப்பதால், ஓசூரில் உள்ள வீட்டை விற்பனை செய்து அடைக்கலாம் என மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும், வாங்கிய கடனை கொடுக்க முடியாததால், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் உயிரிழந்த பிறகு, பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வரும் பணத்தை கடன் வாங்கியவருக்கு கொடுக்க வேண்டும். மீதமுள்ள பணத்தை மகளின் படிப்புக்கும், எனது வேலையை மகளுக்கும் வழங்க வேண்டும் என கடிதத்தில் எழுதியிருந்தது.
இது குறித்து கணேசனின் உறவினர்கள் கூறுகையில், கணேசனுக்கு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஆர்வம் இருந்தது. இதனால், வீட்டிலிருந்த நகையை விற்றும், கடன் வாங்கியும் விளையாடினார். ஆனால், ஆன்லைன் சூதாட்டததால் ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்கவே, கடனை அடைக்க முடியாமல், வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என நினைத்துள்ளார். ஆனால், முடியாததால், அவர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், என்றனர்.