

சென்னை: ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கார்த்திக்(27). இவர் தனது மனைவி சுகந்தியுடன் சென்னை வில்லிவாக்கம் பொன்னன் கிணறு தெரு பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்இரவு மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் சுகந்தி, காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடம் வந்த போலீஸார் கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்டபோது, வீட்டுக்குள் டிபன்பாக்ஸில் 2 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களை வரவழைத்து, 2 நாட்டுவெடிகுண்டுகளையும் கைப்பற்றிஅவற்றை செயலிழக்கச் செய்தனர். பின்னர் கார்த்திக்கை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முன்னாள் ரவுடியான கார்த்திக்கிடம் நாட்டு வெடிகுண்டு வந்தது எப்படி,மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.