

பெங்களூரு: பெங்களூருவில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் பிரதிமா (45). இவரது கணவர் மஞ்சுநாத், மகன் ஷிமோகாவில் வசிக்கின்றனர். இதனால் பிரதிமா தனியாக தங்கி பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதிமா அவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் நேற்று பிரதிமாவின் கார் ஓட்டுநரான கிரண் குமாரை (31) கைதுசெய்தனர். சாம்ராஜ்நகர் அருகே பதுங்கி இருந்த அவரை போலீஸார்மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்துவந்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது கிரண்குமார், தான் 2018-ம் ஆண்டுமுதல் பிரதிமாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த அக்டோபர் மாத இறுதியில் திடீரென வேலையை விட்டுநீக்கியதால் கோபம் ஏற்பட்டு பிரதிமாவை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.