

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே நீதிமன்ற பிடியாணை உத்தரவை நிறை வேற்றுவதற்கு போக்சோ வழக்கில் தொடர்புடைய இளைஞரை கைது செய்ய சென்ற காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஆனந்தா நகரைச் சேர்ந்த அந்தோணி ராயப்பன் மகன் அசோக் என்ற ஜேசுராஜ் (29). பனைத் தொழிலாளியான இவர், 2021-ம் ஆண்டில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். போக்சோ வழக்கில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், இவ்வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலை மறைவாக இருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை நிறைவேற்ற, கீழக்கரை உட்கோட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த முதல்நிலை காவலர் காளிமுத்து (37) உட்பட 3 காவலர்கள் நேற்று காலை ஜேசுராஜின் வீட்டுக்குச் சென்றனர்.
வீட்டிலிருந்த அவரை போலீ ஸார் வெளியில் வரச் சொல்லி காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் சென்று சட்டை அணிந்து வருவதாகக் கூறிச் சென்ற ஜேசுராஜ், திரும்பி வந்தபோது அரிவாளை மறைத்து எடுத்து வந்து காவலர் காளி முத்துவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அருகிலிருந்த மற்ற போலீஸார் ஜேசுராஜை விரட்டிச் சென்று கைது செய்தனர்.
படுகாயமடைந்த காவலர் காளிமுத்து ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, டிஎஸ்பி ராஜா ஆகியோர் மருத்துவ மனைக்குச் சென்று காவலர் காளி முத்துவை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இது குறித்து டிஐஜி துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜேசுராஜ், காவலர் காளிமுத்துவை அரிவாளால் வெட்டியபோது அவரை தடுத்து கைது செய்ய மற்ற போலீஸார் முயன்றனர். அப்போது பனைமரத்தில் ஏறி குதித்து தப்பிக்க முயன்ற போது ஜேசுராஜுக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவரை காவலர்கள் கைது செய்தனர். ஜேசுராஜ் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்று கூறினார்.